பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பால் அவரது சொந்த ஊரான கும்பகோணத்தில் திடீரென காலமானார். டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்களை தயாரித்து அசத்தியவர் மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கத்தில் தீவிர உறுப்பினராகவும் இருந்ததால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
கே.முரளிதரன் தனது கூட்டாளிகளான மறைந்த வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் மற்றும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்த பல திரைப்படங்களை தயாரித்தார். கமல்ஹாசன் (‘அன்பே சிவம்’), விஜயகாந்த் (உளவத்துறை), கார்த்திக் (கோகுலத்தில் சீதை), அஜித் (உன்னை தேடி’), விஜய் (பிரியமுதன்), தனுஷ் (புதுப்பேட்டை) மற்றும் சிம்பு (சிலம்பாட்டம்) ஆகியோர் LMM உடன் பணியாற்றிய ஹீரோக்கள். ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘சகலகலா வல்லவன்’ திரைப்படம் இந்த மூவரும் இணைந்து தயாரித்த கடைசிப் படம்.
நடிகர் அஸ்வின் ராஜாவின் தந்தையான வி.சுவாமிநாதன் வைரஸ் தொற்று காரணமாக காலமானார். கே.முரளிதரனின் மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.